Main Menu

சந்திரிகாவிற்கு கட்டுப்பட்டு செயற்பட முடியாது – தயாசிறி

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகின்ற தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற அடிப்படையில் அவர் மீது மரியாதை இருக்கின்ற போதிலும் தற்போது அவர் கூறும் விடயங்களுக்கு எம்மால் கட்டுப்பட முடியாது என்று சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு 19 ஆம் திகதி சனிக்கிழமை கோதாபய ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் கோதாபயவுக்கு ஆதவளித்து தாம் சுதந்திர கட்சியை பாதுகாக்கின்றோமே தவிர அழிப்பதற்கான நடவடிக்கை எதையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தயாசிறி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசியல் வரவாற்றில் 18 வருடங்களுக்குப் பின்னர் சுதந்திர கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னின்று கடுமையாக உழைத்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என்ற ரீதியில் அவர் மீது எமக்கு மரியாதை இருக்கிறது.

 நாம் அவரை மறக்கவும் இல்லை. எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் தனக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்க்கப்படவில்லை என்ற தனிப்பட்ட கோபத்திலேயே இன்று அவர் செயற்படுகின்றார்.

எனவே ராஜபக்ஷக்களின் எதிர் தரப்பிற்கு ஆதரவு வழங்குவதே சந்திரிகா குமாரதுங்கவின் வழக்கமாகும். இம்முறையும் அதையே செய்ய முனைகின்றார் என்றே தோன்றுகிறது.

சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்சி ரீதியாக எடுக்கும் தீர்மானங்களுடன் இணங்கி செயற்படுவதோடு, கட்சியுடனேயே இருக்க வேண்டும்.

சுதந்திர கட்சியின் தீர்மானம் அதிருப்தியளிக்கிறது என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...