Main Menu

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு : இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை – கோத்தாபய

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது கோத்தாபய ராஜபக்ஷ ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நான் ஜனாதிபதியானால் அங்கீகரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் கலாசாரம் என்னுடையதல்லவெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் எமக்கு ஆதரவளிக்கின்றார் எனவும் இதன்போது தெரிவித்தார் கோத்தாபய ராஜபக்ஷ.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும்  இராணுவத்திற்கு தான் தலைமைதாங்கவில்லையெனவும் கோத்தாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றவுடன் பிரதமர் பதவி மாறும் என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்க காரணம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

பகிரவும்...