Main Menu

சட்டமன்ற தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது- வைகோ பேச்சு

அ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. சார்பில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் 2021 நிதியளிப்பு கூட்டம் சேலத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்தல் நிதியாக 25 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அவரிடம் கொடுத்தனர். நிதியை பெற்றுக் கொண்ட வைகோ தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

கொரோனா பாதிப்பு உள்ள காலத்திலும் நிதியை திரட்டி வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம்- சென்னை இடையிலான 8 வழி சாலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக அவர் இதுவரை குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எடப்பாடி அரசு எடுபிடி அரசாக உள்ளது. தமிழகத்தில் சுற்றுச் சூழலை பாதுகாக்க ம.தி.மு.க. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

திராவிட இயக்க கொள்கைகளை கட்டி காக்கும் வகையில் ம.தி.முக. இயங்கி வருகிறது. புதிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். ஆளும் அ.தி.மு.க. அரசு வருகிற சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்து வருகிறது. ஆனால் அ.தி.மு.க. எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் ஆனந்தராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் நடேசன், நிர்வாகிகள் திவ்யா, சந்திரசேகர், டாக்டர் சங்கேஸ்வரன், பொருளாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...