Main Menu

சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்போது தங்களுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்று (புதன்கிழமை) உடதும்பர, ஹசலக பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு கூறுகையில், “சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் எங்களது முயற்சி வெற்றிபெற்ற பின்னர் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணையத் தொடங்கியுள்ளனர்.

அதாவுல்லாவுடனும் ஹிஸ்புல்லாஹ்வுடனும் இணைந்தவர்கள் இப்போது எங்களுடன் வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றனர். சஜித் பிரேமதாசவின் வெற்றிவாய்ப்பு நெருங்கி வருவதை நாங்கள் கண்கூடாக காண்கிறோம்.

உடதும்பர தேர்தல் தொகுதியில் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கு தீர்வுகாணும் நோக்கில் இரு மாதங்களுக்குள் பாரிய குடிநீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறோம்.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களுக்காக எமது அரசாங்கம், முன்னைய எந்தவொரு அரசாங்கமும் செய்யாத அளவுக்கு பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

பகிரவும்...