Main Menu

சசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ.

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று காலை மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு ஐ.ஜி.யை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், “மதுரையில் ஒருதரப்பினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளன. எனவே அந்த சுவரொட்டியை ஒட்டிய அமைப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளம்பர நோக்கத்தில் இருதரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முக்குலத்தோர் புலிப்படை உதவியாக இருக்கும். மேலும் கூட்டணி அமைக்கும் கட்சியினரிடம் 2 தொகுதிகள் கேட்கப்படும்.

அ.தி.மு.க.வில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து கூற இயலாது.

வேளாண்மையை அழிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவிற்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் அவரைப்பற்றி சொல்லமுடியும். தமிழகத்தில் யார் வேண்டுமானலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்த கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது. இது போன்ற நிலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...