Main Menu

கொரோனா வைரஸ் பரவலால் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தடை

பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணி தனது பிறந்தநாளுக்கு வழங்கப்படும் துப்பாக்கி வேட்டு மரியாதையினை இவ்வருடம் நிகழ்த்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி பிரித்தானியாவின் முடிக்குரிய மகாராணியின் 94ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மகாராணி எலிசபெத்தின் பிறந்த தினத்தில் பிரித்தானியாவின் சிறப்பான நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கி வேட்டுக்கள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப்படும். இந்நிலையில் குறித்த நிகழ்வு இவ்வருடம் இடம்பெற மாட்டாது என பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் குறித்த கொண்டாட்டம் பொருத்தமானதாக இருக்காது என்பதால் மகாராணி குறித்த நிகழ்வினை மறுத்துள்ளதாக, ரோயல் குடும்பத்தை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கி வேட்டுக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதற்கான எவ்விதமான அனுமதியும் வழங்கப்படக் கூடாது என்பதில் பிரித்தானிய முடிக்குரிய மகாராணி உறுதியாக இருப்பதாக பக்கிங்ஹம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிறந்தநாளுக்கான குறித்த சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என பிரித்தானிய மகாராணியால் கோரிக்கை விடுக்கப்படுவது அவரது 68 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் இதுவே முதல் தடவை என பிரித்தானிய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயிணும் மகாராணியின் குறித்த கோரிக்கைக்கு பக்கிங்ஹம் அரண்மனை உடனடியாக எந்தப் பதிலும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பல நாடுகள் மனித அழிவுகளை எதிர்கொண்டுவரும் நிலையில், பிரித்தானியாவும் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளின் வரிசையில் உள்ளது.

அந்நாட்டில், இதுவரை குறித்த வைரஸ் பரவலுக்கு இலக்காகி 14 ஆயிரத்து 500 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 692 பேருக்கு தற்போதுவரை வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

பகிரவும்...