Main Menu

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு 15 கோடி குழந்தைகள் வறுமையில் சிக்கியுள்ளனர்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய குழந்தைகள் நிலை குறித்து 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டன.

இதில், கொரோனா தொற்று தொடங்கியது முதல் உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம் மேற்படி வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக உயர்ந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இதில் 45 சதவீத குழந்தைகள் மேற்படி அத்தியாவசிய தேவைகளில் ஒன்றுகூட கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...