Main Menu

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவ மனைகளில் 9 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்தியாவில் 60 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாடுமுழுவதும் விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 146,704 பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 1,265 பயணிகள், வீடுகளில் 28 நாள் கண்காணிப்பில் உள்ளனர்.

வைரஸ் அறிகுறிகள் இருந்த 75 பேரின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட், புனே ஆய்வு மையம் மற்றும் தேனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

இதில், 73 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. ஒருவரின் முடிவு இன்னும் வரவில்லை.

வைரஸ் பாதிப்புடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காஞ்சிபுரம் பொறியாளர் குணமடைந்துள்ளார்.

தற்போது அரசு மருத்துவமனைகளில் 9 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...