Main Menu

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸ விதாரண மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர்.

ஆகவே இவ்விடயத்தில்  சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக எடுத்துச் செயற்படாவிட்டால், இந்த இரண்டாவது அலையிலேயே இடம்பெறும் மரண எண்ணிக்கையானது  2 மற்றும் 3மடங்காகலாம்.

அதாவது, மனிதர்கள் மூச்சை சுவாசித்து வெளியேற்றுவதன் ஊடாக இந்த வைரஸ் தொடர்ந்து உயிர் பெறுகின்றது. ஆகவே சுகாதார அதிகாரிகளினால் முன்மொழியப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைவரும் மிகவும் அவதானமாக செயற்பட்டால், இந்த வைரஸை முற்றாக ஒழிக்க முடியும்.

மேலும் ஒருசிலருக்கு, நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மூன்றாவது கொரோனா அலை வருவதற்கு முன்னர் இந்த அலையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் இந்த அலை பாரிய அலையாக மாற்றமடையலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...