Main Menu

கொரோனா தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி மறுப்பு – WHO அதிருப்தி

கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராயும் நிபுணர்கள் உள்நுழைய சீனா அனுமதி வழங்காமையினை முன்னிட்டு தான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியாஷூஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பத்தினை கண்டறிவதற்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் தகுதிவாய்ந்த 10 நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வுஹான் நகருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜெனிவாவில் இருந்து காணொளி மூலமான செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியாஷூஸ், இதுவரை சீனா தமது குழு உள்நுழைவதற்கான அடிப்படை அனுமதிகள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், நான் சீனாவின் உயர் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளேன்.

அத்துடன் இவ்விஜயமானது உலக சுகாதார அமைப்பிற்கு மிக முக்கியமான ஓர் விஜயம் என்பதனை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆராய்ச்சி நடவடிக்கையானது, உலக சுகாதார அமைப்பின் மிருகவியல் நோய்கள் தொடர்பான உயர் அதிகாரி பீட்டர் பென் எம்பாரிக்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இரண்டு நிபுணர்களைக் கொண்ட குழு சீனாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் குறித்த குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாகவும் மேலும் ஒருவர் மூன்றாம் தரப்பு நாடு ஒன்றில் தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...