Main Menu

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க 750 பில்லியன் யூரோ நிதி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமை அலுவலகத்தில், வரவு செலவுத் திட்டம் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஒற்றை வரியில் ‘டீல்’ என ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி தொகுப்புடன், முன் எப்போதும் இல்லாத வகையில், எதிர்வரும் 7 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்ட தொகையாக 1.82 டிரில்லியன் யூரோக்கள் ஒதுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் குறித்து ‘ஐரோப்பாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், பிரஸ்ஸல்ஸ் உச்சி மாநாடு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள பெல்ஜிய பிரதமர் சோஃபி வில்ம்ஸ், எதிர்காலத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்னெப்போதும் இவ்வளவு முதலீடு செய்ய முடிவு செய்ததில்லை’ என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...