Main Menu

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 6 – 20 இலட்சம் வரையில் அதிகரிக்கும் என எச்சரிக்கை

இந்தியாவில் ஜூலை மாதத் தொடக்கத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது 6 இலட்சத்திலிருந்து அதிகளவாக 20 இலட்சம் வரையிலும் இருக்கும் என மிச்சிகன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவில் மருத்துவமனைப் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நேரிடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அரங்கேறி வருகிறது.

இதன்படி நேற்று ஒரேநாளில் புதிதாக 6,414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 44 ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக 148 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4172 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 60 ஆயிரத்து 706 பேர் சிகிச்சைகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், 80 ஆயிரத்து 072 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், உலகின் மக்கள் தொகை அதிகமான நாடுகளில் இரண்டாவது நாடான இந்தியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 13 நாட்களில் இரட்டிப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கும் போக்கு குறையவேயில்லை என மிச்சிகன் பல்கலைக்கழகத் தொற்று நோயியல் பேராசிரியர் பார்மர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுப்படவே இல்லை என்று குறிப்பிடும் முகர்ஜி குழுவினர், ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் 6 இலட்சத்து 30 ஆயிரத்திலிருந்து 20 இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அளவில் மருத்துவமனைப் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு நேரிடும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பகிரவும்...