Main Menu

கோத்தாபயவை நானே பாதுகாத்தேன் – விஜயதாச

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலை எதிர்த்து குரல்  கொடுத்தமையின் காரணமாகவே நீதியமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டு பல விமர்னங்களுக்கு உள்ளானேன்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திற்கு  காணப்படவில்லை. மாறாக கடந்த அரசாங்கத்தினரையும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை எவ்விழியிலாவத சிறைக்கு அனுப்பும் நோக்கமே காணப்பட்டது. 

2016 ஆம் ஆண்டு நீதியமைச்சர் பதவி வகிக்கும் போது  அரசாங்கம் முன்னெடுத்த பல அரசியல்  பழிவாங்கலை தடுத்துள்ளேன்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சட்டமாதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை நீதியமைச்சர் பதவியில் இருந்து தடுத்தேன்.

சட்டமாதிபர் திணைக்களத்தின் பிரதிசொலிஸ்டர் உட்பட முக்கிய  தரப்பினர் அறியாமலே கைது செய்வதற்கான  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல்  சதியினை ஆராய்ந்து  பார்கக வேண்டிய தேவை அப்போது காணப்பட்டது சட்டமாதிபர் திணைக்களத்தின் முக்கிய தரப்பினருக்கு தெரியாமல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் இருந்தே அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டன என்பத அறியப்பட்ட பின்னரே  அவரை கைது செய்வதை தடுத்தேன்.

மேலும் நீதித்துறை சுதந்திரத்திற்கும், நீதிபதிகளுக்கும் அரசியலமைப்பு  சபை அநீதி இழைத்துள்ளது தேசிய பாதுகாப்பு உட்பட முக்கிய துறைகளுக்கு தலைவர்கள் தெரிவு செய்யும்போது  திறமைகளுக்கும்,  கல்வி தகைமைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கே முன்னுரிமை  வழங்கப்பட்டது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான  மலிக் விக்ரமசிங்க, கபீர் ஹசிம், சுஜீவ சேமசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோருக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடையாது என்று   ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் பகிரங்கமாக குறிப்பிட முடியாது.

ஆகவே தேசிய பாதுகாப்பினையும், எதிர்கால சந்ததியினரின்  வாழ்க்கையினையும் கருத்திற் கொண்டே  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு முழுமையான ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.

பகிரவும்...