Main Menu

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம்

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்

ஒரு பெண்ணை வளர்த்து படிக்க வைத்து மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு சிரமமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த ஒரு தாய்.

திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன் கோட்டையைச் சேர்ந்த பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு தான் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் கடந்த 1995-ம் ஆண்டு பிறந்தன. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த இந்த குழந்தைகளுக்கு உத்ரா, உத்ரஜா, உத்ரஜன், உத்தாரா, உத்தாமா என பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர்.

ஒரே நாளில் திருமணம்

5 குழந்தைகளையும் வளர்க்க இந்த தம்பதி சிரமப்பட்டனர். ஏழ்மையான குடும்பம் என்பதால் குழந்தைகளை வளர்க்க பல்வேறு தரப்பினரும் உதவி செய்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு பிரேம்குமார் திடீரென மரணம் அடைந்தார். மனம் தளராத ரமாதேவி குழந்தைகளை நன்றாக வளர்த்து வந்தார்.
தற்போது 5 பேருக்கும் 24 வயது ஆகிறது. 4 மகள்களுக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க ரமாதேவி முடிவு செய்தார். அதன்படி தனித்தனியாக மாப்பிள்ளை பார்த்து கடந்த செப்டம்பர் 5-ந் தேதி 4 பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதுகுறித்து ரமாதேவி கூறியதாவது:-

ஏப்ரல் மாதம் திருமணம்

ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகளையும் சிரமத்திற்கு இடையில் வளர்த்தேன். கணவர் திடீரென மரணம் அடைந்ததால் மனம் உடைந்து போனேன். ஆனாலும் பலரது உதவிக்கரம் என்னையும் குழந்தைகளையும் வழி நடத்தியது. தற்போது 4 மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த தீர்மானித்து உள்ளேன்.

அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறும். மகன் உத்ரஜன் பி.பி.ஏ. படித்து உள்ளான். சகோதரிகளின் திருமணத்துக்கு பிறகு அவன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளான். கடவுளின் கருணையால் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சியாக உள்ளது

திருமணம் குறித்து மூத்த மகள் உத்ரா கூறுகையில், ‘நாங்கள் 4 பேரும் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வது என்று ஏற்கனவே தீர்மானித்து இருந்தோம். அவ்வாறு திருமணம் நடக்கப்போவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அதே வேளையில் 4 பேரும் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல இருப்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. தாய் மற்றும் சகோதரனை விட்டு பிரிய மனம் மறுக்கிறது’ என்றார்.

பகிரவும்...