Main Menu

குல்பூஷன் ஜாதவ் விடுதலை ஆவாரா? – இன்று தீர்ப்பு வழங்குகிறது சர்வதேச நீதிமன்றம்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு (48), பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இந்த தண்டனையை பாகிஸ்தான் வழங்கியது. 
ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அத்துடன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தை இந்தியா நாடியது.  இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. 

பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இருதரப்பிலும் விரிவான மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்க உள்ளது.

சர்வதேச நீதிமன்றம்

இதற்காக பாகிஸ்தான் தலைமை வழக்கறிஞர் அன்வர் மன்சூர் கான் தலைமையிலான சட்டக்குழுவினர் நேற்றே தி ஹேக் நகருக்கு வநது சேர்ந்தனர். இந்திய பிரதிநிதிகளும் வந்துள்ளனர்.

பகிரவும்...