Main Menu

கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை காண பொதுமக்கள் ஆர்வம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கருப்பு, சிவப்பு நிற பானைகளில் காணப்படும் தமிழ் பிராமிய எழுத்துக்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

இதுவரை 5 கட்டமாக நடந்துள்ள இந்த பணிகள் மூலம் பண்டைய கால தமிழர் நாகரீகம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக 4, 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன்றவை கண்டறியப்பட்டன.

இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

இவற்றை ஆய்வு செய்ததில் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிந்து சமவெளி நாகரிகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் கீழடி நகர நாகரிகம் விளங்கியிருக்கலாம் என தெரிகிறது.

கீழடியில் கிடைத்த பழமையான தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கீழடியில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கீழடியில் கிடைத்த எலும்புகள் மற்றும் தொன்மையான பொருட்களின் காலம், தன்மை குறித்து ஆய்வு செய்ய மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் தமிழக தொல்லியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து 6-வது கட்டமாக ஆய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முறை கீழடி அருகில் உள்ள மணலூர் கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சி பணி நடைபெறும் என தெரிகிறது.

கீழடி அகழ்வாராய்ச்சியில் தமிழர் நாகரிகம் குறித்த வியக்கத்தக தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக கீழடி மற்றும் அங்கு கிடைத்த பொருட்களை பொதுமக்கள் காண ஆர்வத்துடன் வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்களின் வருகை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது.

பகிரவும்...