Main Menu

கிளர்ச்சிப் படை தலைவர்கள் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி: எத்தியோப்பியா அரசாங்கம்!

எத்தியோப்பியா வடக்கு பிராந்தியமான டைக்ரேயில், தப்பியோடிய கிளர்ச்சிப் படையின் தலைவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களைக் தெரிவிப்பவர்களுக்கு 10 மில்லியன் பிர்ர் (260,000 அமெரிக்க டொலர்கள்) வெகுமதியை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

டைக்ரே மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எஃப்) தலைவர்களைப் பிடிக்க உதவும் வெகுமதி அறிவிப்பினை இன்று (வெள்ளிக்கிழமை) அரச தொலைக்காட்சி ஒளிப்பரப்பியது. பின்னர் டைக்ரே நெருக்கடி குறித்து அரசாங்கத்தின் பணிக்குழுவால் ட்வீட் செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி பிராந்தியத்தின் தலைநகரம் கூட்டாட்சிப் படைகளால் கைப்பற்றப்பட்டதிலிருந்து மலைகளில் ஒளிந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் டிபிஎல்எஃப் தலைவர்கள், மீண்டும் போராடப்போவதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் டைக்ரேயில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் போர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த மோதலானது எத்தியோப்பியாவின் சர்வதேச நட்பு நாடுகளிடையே ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட தேசத்தின் ஸ்திரமின்மை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

கூட்டாட்சி துருப்புக்கள் நவம்பர் 28ஆம் திகதி, டைக்ரேயின் தலைநகர் மெக்கெல்லைக் கைப்பற்றியது, இப்போது இப்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைக் கட்டுப்படுத்துகிறது.

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் ‘டைக்ரேயன்ஸ்’ எனப்படும் சமூகத்தை சேர்ந்தபெரும்பாலானோர் வசித்து வரும் டைக்ரே மாகாணத்தை, டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியினர் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த பிரிவினர் 2018ஆம் ஆண்டுவரை எத்தியோப்பிய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகித்து வந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அபே அகமது பிரதமராக பதவியேற்றது முதல் மத்திய அரசாங்கத்துக்கும் டைக்ரே மாகாணத்தில் உள்ளவர்களுக்கும் இடையே மோதல்கள் நிலவி வந்தது.

டைக்ரே மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டைக்ரே கிளர்ச்சியாளர்கள் குழுவும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னனி கட்சியும் செயற்பட்டு வருகின்றன.

இந்த மோதலின் உச்சமாக கடந்த நவம்பர் மாதம், டைக்ரே மாகாணத்தில் இருந்த டைக்ரேயன்ஸ் சமூகத்தின் இராணுவ பிரிவினர் எத்தியோப்பியாவின் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர்.

இதனால் டைக்ரே மாகாணம் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிந்தது. இதனையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தற்போது பிராந்தியம் முழுமையாக அரசாங்க துருப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

பகிரவும்...