Main Menu

கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளிர் பாரவூர்தியில் இருந்து மீட்பு

பிரிட்டன் நாட்டில் கண்டெய்னர் லாரிக்குள் 39 பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள் கிரீஸ் நாட்டில் குடியேற வந்த 41 பேர் குளுகுளு லாரியில் இருந்து இன்று மீட்கபட்டனர்.

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக துருக்கியை கடந்து இவ்வாறு அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

மேலும், மேற்கத்திய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் பலர் சாலை வழியாகவும் கள்ளத்தனமாக பயணம் செய்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் கண்டெய்னர் எனப்படும் சரக்கு பெட்டகங்களுக்குள் மறைத்து சில தரகர்களால் கொண்டு வரப்படுகின்றனர்.

இப்படி, வியட்நாம் நாட்டில் இருந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற 39 பேர் கடந்த வாரம் ஒரு சரக்கு லாரியின் கண்டெய்னருக்குள் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டனர்.

பிடிபட்ட லாரியை முற்றுகையிட்ட போலீசார்

இந்நிலையில், கிரீஸ் நாட்டின் தெசலோனிக்கி நகரின் அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஏக்னாட்டியா நெடுஞ்சாலை வழியாக வந்த குளிர்பதனம் செய்யப்பட்ட லாரியை க்ஸாந்தி மற்றும் கோமோட்டினி பகுதிகளுக்கு இடையில் சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது கண்டெய்னருக்குள் மறைந்திருந்த 41 பேரை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் பலவீனமாக இருந்த சுமார் 10 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காவலில் அடைத்தனர்.

கைதான லாரியின் டிரைவர் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ள நிலையில் அவரால் அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுவதாக கிரீஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆள்கடத்தலில் தொடர்புடைய துருக்கி நாட்டுக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபோல் துருக்கி எல்லை வழியாக கிரீஸ் நாட்டுக்குள் நுழைய முயன்றதாக இதற்கு முன்னர் கைதான சுமார் 34 ஆயிரம் மக்கள் மிகவும் மோசமான நிலையில் அகதிகளுக்கான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...