Main Menu

காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்!

அழிவுதரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக, தங்கள் நாடுகளில் அவசரநிலையை அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய சமூகம் தமது செயற்பாட்டை மாற்றாவிட்டால், இந்த நூற்றாண்டில் பேரழிவுகரமான வெப்பநிலை அதிகரிப்பை நோக்கி உலகம் செல்லக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நாளில் மெய்நிகர் உச்சி மாநாட்டில் அன்டோனியோ குடரெஸ் தனது முதன்மை உரையை நிகழ்த்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து, ஐ.நா. மற்றும் பிரான்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர்.

இந்நிலையில் அன்டோனியோ குடரெஸ் உரையாற்றுகையில், “பரிஸில் மாநாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக வெப்பநிலை அதிகரிப்பை முடிந்தவரை 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி பாரன்ஹீட்) ஆகக் கட்டுப்படுத்துவதாக நாடுகள் உறுதியளித்தன.

ஆனால், அந்த இலக்கை அடைவதற்கான உறுதிமொழிகள் போதுமானதாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் அவை புறக்கணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், உலகளாவிய சமூகம் போக்கை மாற்றாவிட்டால், இந்த நூற்றாண்டு மூன்று டிகிரி செல்சியஸிற்கும் (5.4F) அதிகமான பேரழிவுகரமான வெப்பநிலை அதிகரிப்பை நோக்கி உலகம் செல்லக்கூடும்.

நாங்கள் ஒரு வியத்தகு அவசரநிலையை எதிர்கொள்கிறோம் என்பதை யாராவது இனியும் மறுக்க முடியாது. அதனால்தான், இன்று, உலகெங்கிலும் உள்ள அனைத்து தலைவர்களையும் கார்பன் நடுநிலைமை அடையும் வரை தங்கள் நாடுகளில் காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பூமியின் வளிமண்டலத்தில் கூடுதல் பசுமை வாயுக்கள் காணப்படுவதில்லை. இதனால், கார்பன் நடுநிலைமை அடையும் வரை அவசரகால நிலை இருக்க வேண்டும்.

இந்நிலையில், காலநிலை அவசரநிலை நடவடிக்கையானது புதிய வேலைகள், சிறந்த ஆரோக்கியம் மற்றும் நெகிழக்கூடிய உட்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு ஊக்கியாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...