Main Menu

கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன தடை – நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க

கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன அணிந்து யாரும் பிரவேசிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கம்பஹா நகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கலந்துரையாடலில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,

கம்பஹா நகரம், பாரியதொரு நிர்வாக நகரமாகும். இங்கு ரயில் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான அரச அலுவலகங்கள் பல உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில், கம்பஹா நகரையும், இங்கு வருவோரையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் எமக்குள்ளது.

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைப்பிரிவினருடன் இணைந்து, இப்பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மாணித்துள்ளோம்.

எனவே, ஹெல்மட், முகமூடி, புர்கா என்பவற்றை யாரும் அணிந்து வரமுடியாதவாறு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

கம்பஹா நகரம், இங்கு வரும் மக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, நன்மை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பகிரவும்...