Main Menu

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப் பட்டுள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது – சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறதென தெரிவித்துள்ளார்.

நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும் பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...