Main Menu

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் நடைபெற்ற முதல் தேசியத் தேர்தல்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் பொது தேர்தல் இடம்பெறுகின்றது.

கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் காலை 6 மணிக்கு (21:00 ஜி.எம்.ரி.) சுமார் 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடனும் வாக்காளர்கள் முகக் கவசங்களை அணிதல் மற்றும் வெப்பநிலை சோதனை என்பனவற்றுடனும் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன.

இதன்படி, வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு 37.5 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை கொண்டவர்கள் சிறப்பு வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்டனர்.

அத்துடன், வாக்களிப்புப் பெட்டிகள் யாவும் ஒரு மீற்றர் இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த அதேவேளை, மக்கள் சமூக இடைவெளியினைப் பேண வலியுறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், அனைத்து வாக்காளர்களும் வாக்குச் செலுத்தும்போது கை சுத்திகரிப்பு மற்றும் பிளாஸ்ரிக் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவத் தொடங்கியதில் இருந்து தேசியத் தேர்தலை நடத்திய முதல் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். மேலும் மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10,591 பேர் இலக்காகியுள்ள அதேவேளை குறித்த வைரஸ் பரவலுக்கு இலக்காகி 225 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...