Main Menu

ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொலை

ஒரே கல்லூரியைச் சேர்ந்த இரு பேராசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பிரான்சின் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Tarbes (Hautes-Pyrénées) எனும் சிறு கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர்களே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் அருகருகே உள்ள இரு வேறு இடங்களில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.

முதலில் 32 வயதுடைய பெண் பேராசிரியை ஒருவர் வீதி ஒன்றில் சடலமாக கிடப்பதாக ஜொந்தாமினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து விரைந்து வந்த ஜொந்தாமினர், பேராசிரியையின் சடலத்தை மீட்டனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பேராசிரியை சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதாக ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அங்கிருந்து சில மீற்றர்கள் தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் மற்றுமொரு பேராசியர் கொல்லப்பட்டிருந்தார். 55 வயதுடைய குறித்த பேராசிரியரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்.

மேற்படி கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரட்டைக்கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதலில் பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கொலையாளி தலைமறைவாகியுள்ளார். அதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட இரு பேராசிரியர்களும் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவ்விரு பேராசியர்களும் இலக்குவைக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

பகிரவும்...