Main Menu

ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

கோவைக்கு தினமும் 3 விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா ஒமிக்ரான்  என்ற பெயரில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி ஒமிக்ரான்  வைரஸ் கண்டறியப்பட்டது.

புதிதாக உருமாறிய இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்பட 11 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதால் அந்த நாடுகள்’அதிக ஆபத்து நாடுகள்’ என்று பட்டியல் இடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த நாடுகளில் இருந்து கோவைக்கு கடந்த ஒரு மாதத்தில் 17 பேர் வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் புதிய வைரஸ் கண்டறிவதற்கு முன்பே அதாவது கடந்த மாதம் 24-ந் தேதிக்கு முன்பே கோவை வந்தவர்கள்.

அவர்கள் கோவை வந்த போது புதிய ஒமிக்ரான்  வைரஸ் பற்றி உலகிற்கு தெரியாது. ஆனால் தற்போது அது தெரியவந்துள்ளதால் அந்த நாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறர்கள் என்றும், அவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பை மேலும் தீவிரபடுத்தி உள்ளனர்.

பெங்களூரில் இருந்து கோவைக்கு தினமும் 3 விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனர். உடனடியாக தனிமை படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பகிரவும்...