Main Menu

ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும்: டக்ளஸ்

தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ அல்ல. அது தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு களமாகவே காணப்படுகின்றது 

என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளனர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். 

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர்  மேலும் தெரிவிக்கையில் –

தீர்வுகளை எட்டமுடியாத பல பிரச்சினைகளுக்கு கூட ஒருமித்த தொழிற் சங்கங்களின் பலத்தால் தீர்வுகள் பெறப்பட்ட வரலாறுகள் அதிகம் இருக்கின்றன. அந்த வகையில் எமது இளைஞர் யுவதிகள் தத்தமது தொழிலிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கான தேவைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காகவும் சரி இந்த சங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக நாம் என்றும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயாராகவே இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது வடக்கில் தொழிலற்றிருந்த அதிகளவான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருந்தது மட்டுமல்லாது  தொழில் புரிபவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து அவர்களது குடும்பங்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு பாதை வகுத்துக் கொடுத்திருந்தோம்.

ஆனாலும் கடந்த நான்கரை வருடங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநல அரசியல் காரணமாக எமது மக்களுக்கு எதுவித விமோசனங்களையும் பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. இதன் வெளிப்பாடுகளே இன்று எதற்கெடுத்தாலும் எமது மக்கள் வீதிக்கிறங்கி போராடும் நிலைக்கு காரணமாகியுள்ளது.

அந்த வகையில் வரவுள்ள சந்தர்ப்பங்களை மக்கள் சரியாக பயன்படுத்தி எமது கரங்களுக்கு தமது அரசியல் அதிகாரங்களை தருவார்களேயானால் இனிவரும் காலத்தை அவர்களுக்கு  சிறப்பானதாக அமைத்து கொடுத்து அவர்களது அரசியல் உள்ளிட்ட அபிலாஷைகளுக்கு முடியுமானவரை தீர்வுகளை கண்டுகொடுக்க எம்மால் முடியும் என்பதுடன் அதற்கா வழிமுறையும் நம்பிக்கையும் எம்மிடம் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்பதாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற குறித்த இந்த சந்திப்பின்போது ஜனநாயக ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் தமது தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் விரிவாக கலந்தரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...