Main Menu

ஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசதியக் கட்சியிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராகக் களமிறங்கினால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சுதந்திர கட்சி தயாராகவுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பொதுஜன பெரமுன , சுதந்திர கட்சிக்கிடையில் சின்னம் குறித்த முரண்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு இறுதி வரை அவர்கள் பொது சின்னம் ஒன்றுக்கு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்றால் எமக்கு இரண்டு மாற்று வழிகள் இருக்கின்றன. தேர்தலில் தனித்து போட்டியிடுதல் அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை என்பனவே அந்த மாற்று வழிகளாகும். 

சுதந்திர கட்சி தனித்து போட்டியிடத் தீர்மானித்தால் வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதில் மாற்றம் இல்லை. இதற்கான யோசனை கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இரண்டாவது மாற்று தெரிவு ஜே.பி.வி உள்ளிட்ட ஏனைய சிறுபாண்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வலுவான முற்போக்கு கூட்டணியொன்றை உருவாக்குவதாகும். இதில் இன, மத பேதமின்றி அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எதிர்வரும் ஓரிரு தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

அத்தோடு சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளிவருவதைப் போன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது சுதந்திர கட்சியோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால் அவர் ஐ.தே.கவிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராகக் களமிறங்கினால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பகிரவும்...