Main Menu

ஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்!

ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ற்றின் (Ivory Coast) பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (Amadou Gon Coulibaly)  தனது 61ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

பிரான்ஸில் இரண்டு மாதங்களாக இதய சிகச்சைக்காக அவர் சென்று நாடு திரும்பிய நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அமடோ கோன் கூலிபாலி வரும் ஒக்ரோபரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆளும் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஐவரி கோஸ்ட்டின் தற்போதைய ஜனாதிபதி அலசேன் ஓட்டாரா (Alassane Ouattara) மூன்றாவது முறையாக பதவியில் இருக்கப் போவதில்லை என்று கூறியதையடுத்து கோன் கூலிபாலி சிகிச்சையை முடித்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக பிரான்சில் இருந்து திரும்பி வந்துள்ளார்.

கோன் கூலிபாலி கடந்த 2012 ஆம் ஆண்டில் இதய மாற்று அறுவைச் சிகிச்சையைப் பெற்ற நிலையில் மற்றுமொரு சிகிச்சைக்காக இவ்வருடம் மே 2ஆம் திகதி பரிஸுக்குச் சென்ற அவர் கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

இதன்போது, “எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் பணியைத் தொடர நான் ஜனாதிபதியின் பக்கத்திலேயே திரும்பி வருகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி எங்களை விட்டு விலகியிருப்பதை நான் மக்களுக்கு அறிவிக்கிறேன் எனவும் அவரது இழப்பு குறித்து நாடு துக்கத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ஓட்டாரா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...