Main Menu

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம்

ஐரோப்பிய நாடுகளில் பரவலாக கடுமையான வெப்பம் நிலவுவதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர்.

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமைக்குப் பின்னர் இப்பிராந்தியங்களில் சராசரியாக 40°C க்கு மேல் வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றுப் புதன்கிழமை ஜேர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்திற்கான மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வட ஆபிரிக்காவிலிருந்து மேலெழுந்துவரும் வெப்பஅலையே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு பல நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்பெயினில், கிழக்கு மற்றும் மத்தியிலுள்ள 11 மாகாணங்களில் 40°C க்கு மேல் வெப்பநிலை உள்ளது.

அதேவேளை நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்குப் பகுதிகளில் 45°C ஐ எட்டக்கூடும். சில பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியிலும் வெப்ப எச்சரிக்கை அதிகாரிகளால் விடுக்கப்பட்டுள்ளது. ரோம் உட்பட மத்திய மற்றும் வடக்குப் பிராந்தியங்களில் வெப்பநிலை 40°C க்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை காலை மிலான் மத்திய ரயில் நிலையம் அருகே 72 வயதான வீடற்ற ரோமேனிய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்நபரின் மரணத்திற்கு வெப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் 2003 ஆம் ஆண்டில் நிலவிய கடுமையான வெப்பத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். இப்போது அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான வெப்பஅலை அடிப்பதனால் பரிஸிலுள்ள சில பாடசாலைகளில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பகிரவும்...