Main Menu

ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு!

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்ணாவார்.

தற்போதைய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நொவெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து உர்சுலா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவை பெற்று உர்சுலா வெற்றிபெற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை உருவாக்குதல், ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் தேவைப்பட்டால் உறுப்பு நாடுகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தையும் ஐரோப்பிய ஆணைக்குழு கொண்டுள்ளது.

நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கை நீங்கள் ஐரோப்பாவில் வைத்திருக்கும் நம்பிக்கை என தெரிவித்த உர்சுலா இது ஒரு பெரிய பொறுப்பு, எனது பணி இப்போது தொடங்குகிறது எனவும் ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...