Main Menu

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்

இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதால் ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என அவரது மகன் சரண் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பிற்கு உள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் மகன் சரண் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் ‘அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு பிசியோதெரபி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.

மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்துவரும் நலன் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...