Main Menu

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டு விடக்கூடாது: நேட்டோ பொதுச் செயலர்!

எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது என என நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைன் போர் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். எனவே, அதற்கேற்ப நாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நடைபெறுவதால் நேட்டோ உறுப்பு நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு தற்போது அளித்து வரும் ஆதரவைக் குறைத்துவிடக் கூடாது. எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், நட்பு நாடுகள் உக்ரைனைக் கைவிட்டுவிடக்கூடாது.

நீண்ட காலத்துக்கு போர் நீள்வதால் ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பது உண்மையே. அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதால் மட்டுமன்றி, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்தாலும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும்.

ஆனால், அதற்காக போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் பின்வாங்கிவிடக் கூடாது. போர் முனையில் உக்ரைன் வீரர்கள் சந்திக்கும் இழப்புகளோடு ஒப்பிடுகையில், உணவு, எரிபோருள் விலையேற்றத்தால் ஏற்படும் இழப்பு மிகவும் சிறியதாகும்.

கடந்த 2014ஆம் ஆண்டில் கிரீமியா பிரதேசத்தை இணைத்துக் கொண்டதைப் போல, தற்போது உக்ரைனின் மற்ற பகுதிகளையும் கைப்பற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் நோக்கம் நிறைவேற அனுமதித்தால், தற்போதைய பொருளாதார இழப்புகளைவிட அதிக விலையை ஐரோப்பிய நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும்’ என கூறினார்.

பகிரவும்...