Main Menu

எமது பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தமிழ் பிரதிநிதிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கடந்த 10 வருடங்களாக உறவுகளைத் தேடி போராடி வருவதாகத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி, தமது போராட்டம் குறித்து அரசாங்கத்திடம் இருந்து ஒரு பதிலையும் தமது பிரதிநிதிகள் தமக்கு பெற்றுத்தரவில்லை என ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடந்த சில நாட்களாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமயர்த்துமாறு கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கத்திடமிருந்து தெரிவிக்கப்படும் தகவலை எமது தமிழ் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டுசென்று தெரிவிக்கின்றார்கள்.

அதேபோன்று நாம் 10 வருடங்களான கோரி நிற்கின்ற, போராடுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக எமது பிரதிநிதிகள் எதனையும் கதைக்காது, எமக்கு ஒரு தகவலேனும் கூறாது இருக்கின்றனர்.

இவ்வளவு காலமாக தொடர்ந்து நாம் போராட்டம் நடத்திவருகின்ற போதும் ஒரு ஆறுதல் என்றாலும் கூறுவதற்கு அவர்கள் வரவில்லை.

எனினும், இது குறித்து தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் கதைத்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அதனை அவர்கள் செய்யவேண்டும்.

அத்துடன், ஜெனீவாவில் இன்று 41ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த கூட்டத்தொடரில் எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பெரும் கரிசனை கொண்டு எமது பிரதிநிதிகள் இந்தவிடயத்தை கையாள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

பகிரவும்...