Main Menu

எமக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம் – சிறிதரன்

தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு இருந்த முன்னாள் போராளிகள் இருவரை சந்திக்க சென்றிருந்தேன். அவர்கள் இருவர் தவிர்ந்து 600க்கு மேற்பட்ட கைதிகள் அங்கு இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டாளர்களாக காணப்படுவதாகவும், அதனாலேயே குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு வாள்வெட்டு சம்பவம் உள்ளிட்ட குற்றங்களிற்காக சிறை அனுபவிக்கின்றார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

உண்மையில் எமது சமூகம் இன்று எங்கு சென்றுள்ளது என்பதை பாருங்கள். ஓர் தேசிய விடுதலைக்காக போராடிய எமது இனம் இன்று திட்டமிடப்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு அடிபணிந்தவர்களாக வாழ்கின்றது.

அதனால் ஒரு சிறைச்சாலையில் மாத்திரம் 600க்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இது தொடர்பாக இந்த சமூகம் சிந்திக்க வேண்டும். இன்று விபத்தாக இருந்தால் என்ன வேறு விடயங்களாக இருந்தாலும் நாம் அதனை கண்டுகொள்ளாதவர்களாகவும், அது வேறு ஒரு நபருக்கு நடந்ததாகவும் அலட்சியமாக விட்டு செல்கின்றோம். போதைப்பொருள் பாவனையில் உள்ள எமது சமூகத்தை மீட்டெடுக்க நாம் ஒன்றுசேர வேண்டும்.

நாட்டில் 20 ஆசனங்களை கைப்பற்றக்கூடிய தேசிய இனமான எம்மத்தியில் ஒற்றுமையை சிதறடித்து பலவீனப்படுத்த பேரினவாதம் திட்டமிட்டு இவ்வாறு செயற்படுகின்றது, இந்த நிலையில எமக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்று சேரவேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...