Main Menu

என் குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி

பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தொலைக் காட்சிகள், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பிரியங்கா கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்யவில்லை என்று பலரும் கருதுகிறார்கள். காங்கிரசில் எனக்கு உத்தர பிரதேச மாநிலத்தை கவனிக்கவே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேசத்தில் உள்ள 42 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்தி உள்ளேன்.

உத்தரபிரதேச மக்களிடம் பா.ஜனதா அரசு மீது கடும் கோபம் உள்ளது. மக்கள் தினசரி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


மோடி இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மிக மிக பலவீனமானவர். ஆனால் அதை அவர் திறமையாக திசை திருப்பி வருகிறார். விவசாயிகளையும், வியாபாரிகளையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாதவர்.


மேலும் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் அவர் பயப்படுகிறார். இதுவரை அவர் எந்த ஒரு நிருபருக்கும் நேரடியாக பதில் சொன்னது இல்லை. ஏதாவது ஒரு கிராமத்துக்கு அவர் சென்று இருக்கிறாரா? ஏழை மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறாரா?
அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் கூட சாமானிய மக்களை சந்தித்து பேசவில்லை. பங்களா வீட்டுக்குள் இருந்துக் கொண்டு மக்கள் பிரதிநிதி என்று சொல்லி கொள்ள முடியாது.
மோடி மிக சிறந்த நடிகர். பிரச்சினைகளை திசை திருப்ப அவர் எதுவும் செய்வார். கோட்சே பற்றி எழுந்துள்ள சர்ச்சையில் அவர் தனது தெளிவான கருத்தை சொல்லவில்லை.


மகாத்மா காந்தியை கொன்றவர் பற்றிய தெளிவான நிலையை மோடி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தியை விமர்சித்தவர்கள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்சே பற்றி எத்தகைய நினைப்புடன் மோடி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை.


உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பலவீனமான நிலையில் இருந்து மாறிக் கொண்டு இருக்கிறது. இந்த தடவை எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும். நிச்சயமாக கூடுதல் இடங்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


எங்களுக்கு இருக்கும் ஒரே நோக்கம் எல்லாம் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். அதற்கேற்ப நாங்கள் தேர்தல் பணியாற்றி உள்ளோம். கட்சிக்காக என்ன விரும்புகிறார்களோ அதை செய்து கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.


இந்த தடவை தேர்தலில் என்னை பற்றியும், ராகுல் பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் மோடி அதிகமாக பேசி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று அவர் பேசவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறார் என்றும் அவர் பேசவில்லை. எங்கள் குடும்பத்தை விமர்சிப்பது மட்டுமே அவரது இலக்காக இருந்தது.


ஆனால் நாங்கள் வேலை வாய்ப்பு பிரச்சினை பற்றி பேசுகிறோம். விவசாயத்தை வலுப்படுத்துவது பற்றி பேசுகிறோம். கல்விக்கு அதிக பணம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்பது பற்றி சொல்கிறோம். இதையெல்லாம் மோடி சொல்ல வில்லை.

பல தடவை மோடியும், பா.ஜனதா தலைவர்களும் என்னையும், ராகுலையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ராகுலை தாழ்த்துவதற்காக என்னையும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் என்னையும், ராகுலையும் அரசியலில் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல.


அரசியலில் அவர் என்னை விட 15 ஆண்டுகள் மூத்தவர். நான் அரசியலுக்கு வந்து 15 வாரங்கள்தான் ஆகிறது. அவர் இந்த உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். அதன் மூலம் நமது நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவாக சிந்தித்து வைத்துள்ளார்.


பல தடவை அரசியல் குறித்து அவர் சொல்வது சரியாக இருக்கும். நானும் அவரிடம்தான் அரசியல் பற்றி கேட்டு வருகிறேன். எனவே எனது அரசியலையும், ராகுல் அரசியலையும் ஒப்பிட இயலாது.
நான் இந்திராகாந்தியின் பேத்தி. எனவே அவரை போன்று இருப்பது இயற்கை தானே. என்னை பார்ப்பவர்கள் எனது பாட்டியுடன் ஒப்பிட்டு பேசும் போதும், வாழ்த்தும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது. வயதானவர்கள் கூட என்னை ஆசிர்வதிக்கிறார்கள்.


இந்த வாழ்த்தும், ஆசிர்வாதமும் எனக்கு துணிச்சலை தந்துள்ளது. அரசியலில் இன்னமும் செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. என்றாலும் மக்கள் மனதில் அவர் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.


எனது குழந்தைகளை நான் அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன். அவர்களை வேறு துறைக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறேன். தாய் என்ற முறையில் செய்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.


எதிர்காலத்தில் அவர்கள் தங்களது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க மாட்டேன்.


நானும் ராகுலும் வன்முறை தாக்கத்தின் நிழலில் வளர வேண்டிய சூழ்நிலை இருந்தது. எனது குழந்தைகள் அத்தகைய துன்பத்தை அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அவர்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தற்போது அவர்கள் வளர்ந்து இருப்பதால்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எனது அரசியல் பாதையை அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். எனது மகன் அரசியலில் பிரச்சினைகளை தீர்க்க போராடுங்கள் என்று அறிவுரை சொல்கிறான். சமையல் செய்து நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும் சொல்கிறான்.


எனது மகளும் எனக்கு அரசியல் பற்றி சொல்லி தருகிறார். இருவரும் எனது அரசியல் பயணத்துக்கு உற்சாகம் தந்து ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.


நான் அரசியலுக்கு வந்து 3 மாதம்தான் ஆகிறது. இந்த குறுகிய காலத்தில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் அடித்தளத்தை வலுவாக்கி இருக்கிறேன். உத்தர பிரதேசத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம்.
மேலும் மிக சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உத்தரபிரதேசத்தில் எனக்கு யாருடனும் வெறுப்பு இல்லை.


மாயாவதியுடன் எனது தாயார் பேசிக்கொண்டு இருக்கிறார். அகிலேசுடன் ராகுல் பேசிக் கொண்டு இருக்கிறார். நாங்கள் தெளிவான நிலையில் இருக்கிறோம். நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் பங்கு பெறும் ஆட்சி அமையும்.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.


பிரியங்கா தனது பேட்டியில் அமேதி தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்யும் பட்சத்தில்தான் போட்டியிடபோவதாக சூசகமாக தெரிவித்தார்.

பகிரவும்...