Main Menu

என் கண் முன்னால் நடந்த இனப் படுகொலை – முள்ளி வாய்க்காலில் உயிர் தப்பிய சிறுமியின் வாக்குமூலம்

தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரித்தானியாவின் பொதுச்சபையில் கலையரசி கனகலிங்கம் என்ற சிறுமியின் உரை இனப்படுகொலையின் சாட்சியாக பதிவாகியுள்ளது.

தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றியுள்ள அவர் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனது பெயர் கலையரசி கனகலிங்கம், எனக்கு 14 வயது. 2009இல் நடந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை குறித்து நான் இங்கு உரையாற்ற வந்திருக்கின்றேன் என அவர் தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

2009ஆம் ஆண்டே எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான வருடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “2009 மே 17ஆம் திகதி நான் எனது தந்தையை இறுதியாக பார்த்தேன். எனது தந்தையை விட்டுப் பிரிந்த அந்த நிமிடம் இன்னமும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றது. நான் ‘எனக்கு அச்சமாக உள்ளது வாருங்கள்’ என எனது தந்தையை அழைத்தேன். ஆனால் அவர் என்னை விட்டுப் போகவேண்டியிருந்தது.

அந்த இறுதித் தருணங்களை என்னால் எப்படி தெரிவிக்க முடியும்? ஏனைய பல சிறுவர்களும் தங்கள் தந்தைகளுக்காக அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்தேன். நான் எனது தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்தபடி அழுதேன். அவர் எனக்கு முத்தமிட்டுவிட்டு கண்ணால் எதனையோ சொல்லமுயன்றவராக விலகிச்சென்றார்.

நான் தற்போது லண்டனில் வாழும் அதேவேளை என்னுடன் இருக்கும் எனது தாய், தந்தை உயிருடன் இருக்கின்றனரா, இல்லையா என்ற துயரத்துடன் வாழ்கின்றார்.

ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் துயரத்தை மறைத்துவிட்டு நாங்கள் அவருடைய வருகைக்காக முகத்தில் சிரிப்பை ஏற்படுத்தியபடி காத்திருக்கின்றோம்.

எனது இருண்ட நாட்களின் போது எனது தந்தை இங்கிருந்து எனது வாழ்க்கைக்கு வழிகாட்டினால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என நான் நினைப்பதுண்டு.

எனது தந்தையைப் பார்ப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் எனது உறவினர்களுடன் நான் பதுங்குழிக்குள் இருந்தேன். அவ்வேளை எனக்கு தெரிந்த சிறுவன் சைக்கிள் ஓடுவதைப் பார்த்தேன். நான் அவனை கூப்பிட எண்ணினேன். ஆனால் அதற்கு முதல் படையினரின் எறிகணை எங்களுக்கு அருகில் விழுந்து வெடித்தது. அந்த சிறுவன் தூக்கியெறிப்பட்டான்” என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், “விமானக் குண்டு வீச்சினால் எனது இரு உறவினர்கள் கொல்லப்பட்டனர். என்னால் அதனை மறக்க முடியாது. குண்டு பதுங்குழியின் மேல் விழுந்தது எனது உறவினர்கள் அதற்குள் சிக்குண்டனர்.

இன்றும் நான் அந்த நினைவுகளுடன் வாழ்கின்றேன். எனது தந்தைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் நான் ஒவ்வொரு நாளும் போராடுகின்றேன். தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது எனது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவராது. ஆனால் எனது தந்தைக்கும் காணாமல்போன ஏனையவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்” என கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...