Main Menu

எதிர்கட்சியே இல்லாமல் திமுக ஆட்சி அமைக்கும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொட்டாரம், நாகர்கோவில், குலசேகரத்தில் நேற்று பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தற்போது நமக்கு கருத்து கணிப்புகள் 185 சீட் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் 234 சீட்டு பெற்று ஆட்சி அமைக்கனும் எதிர்க் கட்சி இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் இப்போது கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி இரவு ஒரு உத்தரவு போட்டார் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

உங்களை எல்லாம் நடுத்தெருவில் தவிக்க விட்டார். அதனால் தான் கடந்த எம்.பி. தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை. அதே மாதிரி இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வுக்கு ஒரு சீட்டு கிடைக்க கூடாது.

தமிழகத்தில் மழை வெள்ளம், ஓகி, கஜா புயலால் பாதிப்பு, நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடி கேட்டோம். தரவில்லை. யார் இதனை தட்டிக்கேட்க வேண்டும். எடப்பாடி மக்களையும் தமிழ் நாட்டையும் மோடியிடம் விற்று விடுவார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மதுரையில் அடிக்கல் நாட்டினார்கள். இன்னும் வேலை நடைபெறவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள். மறைந்த ஜெயலலிதாவுக்கு ஆனால் இந்த எடப்பாடி பழனிசாமிக்கு யாராவது ஓட்டு போட்டீர்களா? இல்லை. இன்று அவர் முதல்-அமைச்சராக எப்படி ஆனார் என்று உங்களுக்கு தெரியும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தைக் வெளியே கொண்டு வந்து, அவர் சாவுக்கு காரணமான கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மு.க. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. பல இளம்பெண்களை பொள்ளாச்சியில் வன்கொடுமை செய்தார்கள். அதற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு போராட்டம் நடத்தியவர் தி.மு.க. தலைவர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகி, இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாத ஊழல் மிகுந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இன்னும் 14 நாட்கள்தான் இருக்கிறது. ஒரே ஒரு அமாவாசைதான் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு அமாவாசை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் ஒரு அமாவாசை உள்ளது. யார் என்று உங்களுக்கு தெரியும். எனவே நீங்கள் எல்லாம் கவனமாக நமது வேட்பாளர்களை அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பகிரவும்...