Main Menu

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மது ஆலை கண்டுபிடிப்பு

எகிப்தில் ஆய்வு பணியின்போது அபிடோஸ் நகரில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்று அபிடோஸ். இங்கு மிகப் பெரிய கல்லறைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இந்த நகரில் எகிப்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆய்வு பணியின்போது அபிடோஸ் நகரில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலையை அவர்கள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து அந்த தொல்லியல் துறை ஆய்வு குழுவின் பொதுச்செயலாளர் மொஸ்டபா வஜீரி கூறுகையில் ‘‘கிமு 3150 முதல் கிமு 2613 வரை இருந்த முதல் பேரரசை உருவாக்கிய மன்னன் நாா்மா் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டிருக்கலாம்.

இரு வரிசைகளில் 40 பானைகள் பொருத்தப்பட்டு தானியங்களையும் நீரையும் கலந்து ‘பீா்’ மதுபானம் தயாரிக்கும் வகையில் அந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.‌ எகிப்து மன்னர்களின் இறுதி சடங்கின் போது அரச சடங்குகளை வழங்குவதற்காக குறிப்பாக இந்த இடத்தில் இந்த மது ஆலை கட்டப்பட்டிருக்கலாம். இங்கு ஒரே நேரத்தில் சுமார் 22 ஆயிரத்து 400 லிட்டர் வரை பீர் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கும் என்று கருதப்படுகிறது’’ என்றார்.

மேலும் அவர் இதுவே உலகின் மிகவும் பழமையான உயர் உற்பத்தி மதுபான ஆலை என்று நம்பப்படுவதாக கூறினார்.

பகிரவும்...