Main Menu

ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான பொலிஸ் எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை 4.30 முதல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாக்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்றைய தினம் இந்த பிரதேசத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் குழப்ப நிலையின் போது பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் அல்ல மாறாக இது தொற்றுநோய் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டதாகவே அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் இதயபூர்வமாக சிந்தித்து செயற்படவேண்டிய தருணம் இது. இந்த பிரதேசங்களில் ஊரடங்கு சட்ட உத்தரவை மதிக்காது செயற்படுவோர் அதாவது மோட்டார் வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறான வாகனங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்க்கப்படும். இருப்பினும் இப் பிரதேசத்திற்கு ஊடாக யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், மன்னார் போன்ற மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அவசர சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் இவ்வழியாக செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவை தவிர இப் பிரதேசத்தில் உள்ளோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அதை விடுத்து ஒன்றுகூடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து பொலிஸ் நிலைய எல்லை பகுதிக்குள்ளும் ஆகக் குறைந்தது 2 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். பொலிஸ்மா அதிபர் இதற்கான உத்தரவை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலாப்பயணங்கள் போன்றவற்றுக்கான பஸ்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று பயணிகள் போக்குவரத்து பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

இதனை மீறி செயற்படும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பஸ்களுக்கான அனுமதிப் பத்திரங்களையும் சட்ட விதிகளுக்கு அமைவாக நிரந்தரமாக இரத்து செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பகிரவும்...