Main Menu

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி மக்ரோன்

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று ஜி7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் குறித்த மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போர் குறித்து பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் வர்த்தகப் பிரச்சினை குறித்த நாடுகளை மாத்திரம் பாதிப்பதில்லை எனவும், ஒட்டுமொத்த உலகையே அது பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள்ளே சுருங்கி வருகின்றன. பிற நாடுகளுடன் நல்ல உறவை மேற்கொள்ள அவை முன்வருவதில்லை.

இது ஆரோக்கியமான போக்கு கிடையாது. இது மிக மோசமான விளைவையே ஏற்படுத்தும். உலக வளர்ச்சிக்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதை நோக்கி பயணிப்பதே நம்முடையே நோக்கமாக இருக்கவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளுக்கிடையேயான மோதல் என்பது அவ்விரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை. அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...