Main Menu

உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் சீனாவின் ஏற்றுமதி வீதம் அதிகரிப்பு!

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 9.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

சீனா கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ரூ.17.64 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூலை மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 7.2 சதவீதம் வளா்ச்சியடைந்திருந்தது.

அதே வேளையில், சீனாவின் இறக்குமதியும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.13.22 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை சீனா இறக்குமதி செய்தது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதம் குறைவாகும்.

சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ள போதிலும் அப்பொருள்களின் இறக்குமதி கடந்த மாதத்தில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்கள் 2 சதவீதம் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன.

பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வருவதால் அங்கு தொழிலக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சீனப் பொருள்களுக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

பகிரவும்...