Main Menu

உலக அளவில் நேற்றைய மரணப் பதிவுகள் – சற்று குறைந்து வரும் கொரோனா?

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மனிதப் பேரழிவை நடத்திவரும் நிலையில் கடந்த நாட்களில் இருந்து நேற்றைய மரணப் பதிவுகள் சற்று குறைந்துள்ளமை ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது. கடந்த நாட்களில் ஒரேநாளில் 6 ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவாகிவந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 இலட்சத்து 73 ஆயிரத்து 712 ஆகக் காணப்படுவதுடன் உயிரிழப்பு மொத்தமாக 69 ஆயிரத்து 458ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 71 ஆயிரத்து 408 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உலக அளவில் 45 ஆயிரத்து 619 பேர் நேற்று வரையான நிலைவரப்படி வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறும் நிலையில், 2 இலட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவில் காலூன்றியுள்ள வைரஸ் அங்கு இன்னும் தீவிரமாகவே பரவி வருகின்றது. நேற்று மட்டும் 25 ஆயிரத்து 316 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 3 இலட்சத்து 36 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 165 பேர் மரணித்துள்ள அதேவேளை, மொத்த மரணங்கள் 9 ஆயிரத்து 616ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய நாடுகளை விடவும் இங்கு உயிரிழப்புக்கள் தற்போது அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றது. அமெரிக்காவில் வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டோர் இன்னும் 8 ஆயிரத்து 702 பேர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அடுத்த இரு வாரங்களில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்பு நேரும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வொஷிங்ரனில் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க முடியாது எனவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை அடுத்து, நேற்று ஒரேநாளில் ஸ்பெயின் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் அங்கு 694 பேர் மரணித்துள்ளனர். மேலும், மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளதுடன் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 478 பேர் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்பெயினில் வைரஸால் உயிரிழக்கும் வீதம் சற்றுக் குறைவடைந்துள்ளதுடன் இதுவரை அங்கு ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தாலியில் கடும் மனித அழிவை ஏற்படுத்திவந்த வைரஸின் தாக்கம் சற்றுக் குறைந்துள்ளமையை அறியமுடிகிறது. அங்கு நேற்று ஒரேநாளில் 525 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த நாட்களைவிட ஓரளவு ஆறுதலைத் தரும் வகையில் மரணப்பதிவுகள் குறைந்துள்ளன.

இத்தாலியில் மொத்தமாக 15ஆயிரத்து 887 பேர் மரணித்துள்ளதுடன் இதுவே உலக நாடுகளில் கூடிய மரணப்பதிவாக உள்ளது. மேலும், நேற்று அங்கு 4 ஆயிரத்து 316 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 948 ஆக பதிவாகியுள்ளது.

இதனைவிட மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸில் கொரோனா தீவிர தாக்கத்தை அண்மைய நாட்களில் ஏற்படுத்தி வருகின்றது. அந்நாட்டில் நேற்று மட்டும் 518 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 78 ஆகக் காணப்படுகிறது.

அங்கு கடந்த 3 நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியதன் விளைவாக இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. அங்கு 92 ஆயிரத்து 839 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜேர்மனியில் தொடர்ந்து வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 584 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், பிரித்தானியாவில் ஒவ்வொருநாளும் 500இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் நேற்றும் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 806 ஆகக் காணப்படுகின்றது. அங்கு நேற்று மட்டும் 5 ஆயிரத்து 903 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரானில் நேற்று மட்டும் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு அங்கு 3 ஆயிரத்து 603 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், இதுவரை 58 ஆயிரத்து 226 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நேற்று 2 ஆயிரத்து 483 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பெல்ஜியத்தில் நேற்று 164 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 447 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், நெதர்லாந்தில் 115 பேர் நேற்று மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 766 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றதுடன் பெல்ஜியத்தில் 19 ஆயிரத்து 691 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை நெதர்லாந்தில் 17 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கனடாவிலும் கணிசமாக பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் நிலையில் அங்கு நேற்று மட்டும் 49 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணம் 280 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், 15 ஆயிரத்த 512 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நாடுகளை விட, பிரேஸிலில் நேற்று 41 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், போர்த்துக்கலில் 29 பேரும், சுவீடனில் 28 பேரும், அயர்லாந்தில் 21 பேரும் மரணித்துள்ள அதேவேளை, டென்மார்க் மற்றும் இந்தியாவில் தலா 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த சீனாவில் தொடர்ந்தும் வைரஸ் பரவல் கட்டுக்குள் காணப்படுகிறது. அங்கு மொத்தமாக 81 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 30 புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 3 மரணங்கள் பதிவாகின.

பகிரவும்...