Main Menu

உலக அளவில் கொரோனா பரவல் சரிவு – உலக சுகாதார அமைப்பு தகவல்

ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா எனும் பெருந்தொற்று உலகம் முழுவதையும் ஓராண்டுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருக்கிறது. லட்சக்கணக்கான மரணங்கள், கோடிக்கணக்கான பாதிப்புகள் என இந்த நோய்த்தொற்று மனித குலத்துக்கு அளித்திருக்கும் பரிசு கொடூரமானது.

அப்படி ஓராண்டுக்கும் மேலாக கோரத்தாண்டவமாடி வரும் இந்த தொற்று தற்போது படிப்படியாக தனது ஆட்டத்தை அடக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்தவகையில் உலக அளவில் புதிய பாதிப்புகள் குறைந்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம் 27 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகி இருக்கும் நிலையில், இது முந்தைய வாரத்தை விட 16 சதவீதம் அதாவது சுமார் 5 லட்சம் குறைவாகும். இதைப்போல கடந்த வாரம் 81 ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவும் முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 10 சதவீதம் குறைவாகும்.

உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் 5-ல் இரட்டை இலக்க சதவீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் மட்டும் 7 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது. அதேநேரம் அனைத்து மண்டலங்களிலும் உயிரிழப்பு வீழ்ச்சியடைவது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பகிரவும்...