Main Menu

உலகமெங்கும் பெரு நிறுவனங்களில் ஊடுருவியுள்ள 20 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்!

உலகமெங்கும் முக்கியமான பெரு நிறுவனங்களில் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் செய்திவெளியிட்டுள்ளது.

உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் சுமார் இருபது லஇட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது பெயர்கள் மட்டுமின்றி கட்சியில் அவர்களது பதவி, பிறந்த திகதி, தேசிய அடையாள எண் மற்றும் இனக்குழு விபரங்கள் ஆகியவையும் தற்போது வெளியாகியுள்ள தகவல் திரட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் பெயர்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.

அந்த நிறுவனங்களின் பட்டியலில் தயாரிப்புத் துறையில் போயிங் மற்றும் வோக்ஸ்வேகன். மருந்துத் தயாரிப்பில் பைஸர் மற்றும் அஸ்ட்ராசனேகா, வங்கிகளில் ஏ.என்.இசட் மற்றும் ஹெச்.எஸ்.பி.சி ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக ஹெச்.எஸ்.பி.சி மற்றும் ஸ்டாண்ட்டர்ட் சார்டட் ஆகிய இரு வங்கிகளில் மட்டும் 700க்கும் மேற்பட்டவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளது.

கூடுதலாக இத்தகைய மேற்கத்திய நிறுவனங்களில் 79,000 சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் செயற்பட்டு வருவதும், இதன் உறுப்பினர்கள் அனைவரும் சீன ஜனாதிபதியான ஸி ஜின்பிங்கிற்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஷாங்காய் நகரத்தில் உள்ள அரச தரப்பு சர்வர் கனணிப்பொறி ஒன்றில் இருந்து சீன எதிர்ப்பாளர்களால் திருடப்பட்ட இந்த தகவல் திரட்டானது, மற்றொரு சர்வதேச குழுவின் மூலமாக தற்போது நான்கு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ள பன்னாட்டு ஊடகக் குழுமத்திற்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...