Main Menu

உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயமானது!

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது.

இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் என 147 பேரும் மத்திய அமைச்சர்களாக 14 பேரும் தற்போது உள்ளனர்.

உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுதல், அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுதல், பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணுதல் போன்றன இவ்வமைப்பின் நோக்கமாகும்.

அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் தமிழராய், பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக பயணம் செய்து அரசாங்கங்களுடைய அனுசரணையோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக தீர்வு காணவும் பல்வேறு நாடுகளுடன் இறையாண்மையுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் செயற்படவுள்ளது.

இவ்வமைப்பிற்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக செல்வகுமார், இலங்கை இணைப்பாளராக சுப்பிரமணிய தியாகு, சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதி, மலேசியாவிற்கு தீனதயாளன், மொரிஷியஸிற்கு நித்யானந்தா, கனடாவிற்கு ஆலன் டீன் மணியம், கயானா மற்றும் பப்புவா நியூ கினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயற்படவுள்ளனர்.

உலகில் 13 கோடியே 60 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் இரண்டு வீதமுள்ள தமிழர்கள், அனைத்து நாடுகளிலும் அரசின் பிரதிநிதி பெற்று மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமுதாயமாக மாற்ற வேண்டும் என  உலகத் தமிழ் பாராளுமன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விரைவில் எட்டு நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இணையவழியில் பொது விவாதம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...