Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை

உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ, அரசியல்வாதிகளோ இதுவரை நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.
நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி நேர்மையுடன் பக்கச் சார்பற்ற முறையில் விசாரணைகளை மேற்கொள்வது கட்டாயத் தேவையாக இருக்கின்றது என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தி நிற்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை (15.08.2019) மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு ஆலய பெருவிழா நடைபெற்றபோது நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் கலந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது மறையுரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் சூழல் குறித்து அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை செய்து நீதியின் முன் கொண்டு வருமாறு நாம் தாழ்மையுடன் அரசை கேட்டிருந்தோம். ஆனால் இது விடயமாக நீதியான உண்மையான எதுவும் இன்னும் இடம்பெறவில்லை.

இது விடயமாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்து நிற்கின்றது. பாதுகாப்புக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதையும் நாம் கேட்டு நிற்கின்றோம்.நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி, நேர்மையுடன் பக்கச் சார்பற்ற முறையில் விசாரனைகளை மேற்கொள்வது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு நாம் நன்றி கூறி நிற்பதுடன் மீண்டும் அரசை வேண்டி நிற்பது நீதியான உண்மையான விசாரணையை மேற்கொள்ளும்படியும் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வர வேண்டும் எனவும் நாம் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஆகவே அன்பின் பிள்ளைகளே பக்தர்களே நாம் நாட்டின் நலன் குறித்து மரியன்னையிடம் கையேந்துவோம் மன்றாடுவோம். செபமாலை மாதா நிச்சயம் நமக்கு உதவி புரிவார் என்பது திண்ணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...