Main Menu

உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த  குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும்  இலங்கைக்கான அதன் அர்த்தம்“ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, உருவாக்கப்பட்டிருந்த தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்ட குழுவைப் போன்றதொரு குழுவை, சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்டக் குழு சிறிலங்காவில் இருப்பது நாட்டுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

உண்மையில், போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச இருந்த போது, சிறிலங்காவில் அத்தகைய குழுவொன்றை வைத்திருந்தார்.

அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார். நாட்டில் உள்ள எல்லா புலனாய்வு கிளைகளினதும், தகவல்களை பகிர்ந்து, அதனை உயர்மட்டங்களுக்கு கொண்டு சென்று இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் அதுபோன்றதொரு குழுவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...