Main Menu

உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம் ?

உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (03.01.20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

கடந்த காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசாங்கமும் இந்நாட்டை நேசிப்பவர்களும், எதிர்க் கட்சியினரதும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த உத்தேச பயங்கரவாத தடுப்புச்  சட்டத்தை நீக்குவது தொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் (02.01.20) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது. இதனை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்தார்.

இலங்கையில் அனைத்து சுதந்திரமும் அதாவது ஊடக சுதந்திரம், தொழிற்சங்க சுதந்திரம், மாணவர் சங்க மற்றும் மாணவர் அமைப்புக்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் அனைத்தையும் புறந்தள்ளி பயங்கரவாதத்தை தடுப்பதற்கு பதிலாக பயங்கரவாதத்தை தாலாட்டுவதைப் போன்று இந்த சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திருத்த சட்டம் தேசிய சேவைக்கு அமைவாக தயாரிக்கப்படவில்லை சர்வதேச சக்திகளின் தேவைகளின் அடிப்டையில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த நீதித்துறை அமைச்சர் கூட இதற்கு உடன்படவில்லை.

அப்போது இருந்த ஜனாதிபதியும் இதனை விரும்பவில்லை. இவை அனைத்தையும் கவனத்தில் கொள்ளாது அப்போதைய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பண இதனை சமர்ப்பித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக மாறுபட்ட வகையில் இது அமைந்திருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இந்த சட்டத்தை மதிப்பீடு செய்யும் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த எமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக இந்த சட்டத்தில் இருந்த குறைபாடுகளை எடுத்து கூறிவந்தார்.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போது முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை உறுதி செய்து அனைத்து இன மக்களின் நலன்களையும் பாதுகாப்பதற்காகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்றி அனைத்து மக்களும் அச்சம் இன்றி வாழக்கூடிய வகையில் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பெறுபேறாக 78 ஆவது அரசியல் யாப்பில் உள்ள பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டம் அதேபோன்று இருப்பதுடன் இதன் பின்னர் மீள் பயங்கரவாத சட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகளை தாலாட்டுவதற்கான சட்டம் முழுமையக விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...