Main Menu

இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17ல் நடை பெறும் – பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் (99), நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ இவர் இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் இளவரசராக நெடுங்காலம் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள மன்னர்கள், அரச தலைவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்கான அறிவிப்பை அவரது மனைவியும் இங்கிலாந்து ராணியுமான இரண்டாம் எலிசபெத் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 17-ம் தேதி மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும். இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும். மேலும் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் நேரம் என்பதால் வெகுவிமர்சையாக ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது.

வரும் 17-ம் தேதி மாலை வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு எடுத்துச்செல்லப்படும்.

இறுதிச்சடங்கில் ராணுவத்தினரே பங்கேற்பார்கள், குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.

இந்த ஊர்வலம் சரியாக 3 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்படும். இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழங்கும். அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.

இறுதிச்சடங்குகளில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பகிரவும்...