Main Menu

இலங்கை அரசாங்கம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் – மீனாக்சி கங்குலி

போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாரபட்சம் மற்றும் குரோத பேச்சுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தற்போது கொரோனா வைரசினை பயன்படுத்தி மதரீதியிலான பதட்டத்தை அதிகரிக்க முயல்வதுடன் மத சுதந்திரத்தை மீறுகின்றது எனவும் மீனாக்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்யவேண்டும் என அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்கள் இதனை செய்யவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இது மத உரிமையை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறிந்து பகிரங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பொதுமக்கள் மீண்டும் குரோத உணர்வு தோன்றுவதை தடுக்கவேண்டியது குறித்தும் ஆராயப்பட்டன.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரசாங்கம் கண்மூடித்தனமான கொள்கைகளை பின்பற்றி வருகிறது எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பாதுகாப்பு செயலாளராக விளங்கிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது யுத்த குற்றச்சாட்டுகள் உள்ளன எனவும் மீனாக்சி கங்குலி கூறியுள்ளார்.

இந்த நிலையில், அவரது நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்டுவதற்கு பதிலாக, நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...