Main Menu

இலங்கையில் நடைபெறவிருந்த முதல் தர கிரிக்கெட் போட்டி இரத்து!

இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நடைபெறவிருந்த போட்டியே இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பருவகாலத்திலும் கவுண்டி சம்பியனாக மாறும் அணியுடன், கிரிக்கெட்டின் விதிமுறைகளை வழிவகுக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடுவது வழக்கம்.

அந்தவகையில், இந்தப் பருவகாலத்தில் கவுண்டி சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் அணியும். மெர்லிபோன் கிரிக்கெட் கழகமும் விளையாடவிருந்த முதல்தரக் கிரிக்கெட் போட்டி இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் மார்ச் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவருவதால் இப்போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இடம்பெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார தலைமையிலான மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் நீண்டகால நோக்கத்தின் ஒரு பகுதியாக, சுமார் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், விளையாடியது.

பகிரவும்...